ஹாங்காங்
சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
உலக ஆன்லைன் வர்த்தக அரங்கில் அமேசான் நிறுவனம் முன்னணியில் உள்ளதாக சொல்லப்பட்டாலும் சீனாவில் அலிபாபா நிறுவனமே முன்னணியில் உள்ளது. அலிபாபா நிறுவனம் சீனாவில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் வர்த்தகம் செய்து வரும் அலிபாபா நிறுவனம் தற்போது 4.8 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனம் ஆகும். இந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக்மா உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
கடந்த ஆண்டு ஜாக் மா அலிபாபா நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். தனக்குப் பிறகு அடுத்ததாக டேனியல் ஜாங் பொறுப்பு ஏற்பார் என அறிவித்திருந்தார். நேற்று அவருக்கு 55 வயதானதையொட்டி ஜாக் மா தந்து பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையொட்டி அலிபாபா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள ஹாங்ஷோ நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் மாபெரும் விழா ஒன்று நடக்க உள்ளது.
தற்போது ஓய்வு பெறும் ஜாக்மா படிப்படியாகத் தனது பொறுப்புக்களில் இருந்து விலக உள்ளார். அவர் அலிபாபா பங்குதாரர்கள் அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராகத் தொடர உள்ளார். எதிர்காலத்தில் அவர் அமைத்துள்ள அறக்கட்டளை மூலம் நன்கொடை மற்றும் சேவைப் பணிகளை மேற்கொள்ள ஜாக் மா திட்டமிட்டுள்ளார். முன்னாள் ஆசிரியரான ஜாக் மா கல்விப்பணிகளிலும் கவனம் செலுத்த உள்ளார்.