புதுடெல்லி: காஷ்மீரில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழல்களையடுத்து, அம்மாநிலத்தின் ஆப்பிள் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களிடமிருந்து மத்திய அரசே நேரடியாக ஆப்பிள்களை வாங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் ஷோபியன், பாரமுல்லா, ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் ஆகிய பகுதிகள் ஆப்பிள் விளைச்சலுக்கு பெயர்பெற்றவை. அக்டோபர் மாதத்திற்குள் ஆப்பிள் அறுவடை அனைத்தும் முடிவடைந்து, கொள்முதல் நடவடிக்கைகள் அனைத்தும் டிசம்பர் 15க்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 370 சட்டப்பிரிவு நீக்கத்தால், அங்கே தகவல்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு இன்னும் நிலைமை சீரடையவில்லை. எனவே, சரியான நேரத்தில் அனைத்தும் நடைபெறவில்லை என்றால், கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பல ரக ஆப்பிள்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் அவர்களுக்கான தொகையை செலுத்திவிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோபூர், ஷோபியன் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் முக்கிய ஆப்பிள் மண்டிகள் உள்ளன. விலை நிர்ணய கமிட்டியானது, ஆப்பிள்களுக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.