சென்னை

சென்னை நீதிமன்றத்தை விட மேகாலயா நீதிமன்றம் மட்டமானது இல்லை என முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

சென்னை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வரும் வி கே தகில்ரமணி உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.  அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.  அத்துடன் எந்த ஒரு வழக்கு விசாரணையையும் அவர் நடத்தாமல் உள்ளார்.  அவருக்கு ஆதரவாகத் தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே சந்துரு ஒரு ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த விவகாரம் தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது.  கடந்த 1980களின் இறுதியில் ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்துக்கு வெளி மாநில நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கும் வழக்கம் தொடங்கியது   தற்போது நாடெங்கும் 25 உயர்நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.  எனவே அனைத்து உயர்நீதிமன்றத்துக்கும் வெளி மாநிலத்தவரை தலைமை நீதிபதியாக நியமிப்பது இன்றியமையாததாகும்.

இந்த கொள்கை தற்போது நடைமுறையில் உள்ள போது ஒரு நீதிபதி தம்மை வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மேகாலயா உயர்நீதிமன்றத்தில் பணி புரிய மாட்டேன்  என மறுக்க முடியாது.   ஏனென்றால் மேகாலயாவும் இந்திய நாட்டில் தான் உள்ளது.    ஒரு நீதிபதிக்கு அளிக்கப்படும் மதிப்பு, மரியாதை, ஊதியம்,. சலுகைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் போது அனைத்து மாநில உயர்நீதிமன்றமும் சமம் ஆகும்.

அரசியலமைப்பின் படி எந்த ஒரு உயர்நீதிமன்றமும் பெரியது என்றோ சிறியது என்றோ முடிவு கட்ட இயலாது.   இது இங்கிலாந்து ஆட்சியில் அரசி விக்டோரியாவின் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.  எனவே இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தை விட மேகாலயா நீதிமன்றம் எந்த வகையிலும் மட்டமானது இல்லை.   சொல்லப் போனால் இங்குள்ள வேலைப்பளுவை விட அங்கு பணிகள் குறைவாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.