மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ரவி சாஸ்திரியின் ஊதியம் சுமார் 20% அளவிற்கு உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: ரவி சாஸ்திரி முதன்முறை தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, அவரின் ஊதியம் ஆண்டிற்கு ரூ.8 கோடி என்ற அளவில் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது 20% உயர்வு தரப்படும் நிலையில், அந்த தொகை ரூ.9.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை அதிகரித்திருக்கும்.
தலைமைப் பயிற்சியாளரைப் போன்றே இதர துணைநிலை பயிற்சியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பதாய் கூறப்படுகிறது. பந்துவீச்சு பயிற்சியாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட பாரத் அருணின் சம்பளம் ஆண்டிற்கு ரூ.3.5 கோடி என்பதாக அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேயளவு ஊதியம்தான் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ரதோரின் சம்பளம் ரூ.2.5 கோடி அல்லது ரூ.3 கோடி என்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.