சென்னை:
மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, மதுரை உயர்நீதி மன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த உள்ளதால் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலாயா உயர்நீதி மன்றத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் தஹில்ரமணி சென்னை உயர்நீதி மன்றத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது பணி மாற்றத்துக்கு வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி மாற்றத்தைக் கண்டித்து, நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களை நடைபெறும் என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களை கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை நீதிபதி ரஹில் ரமணியை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]