மாட்ரிட்: பார்சிலோனா கிளப் அணியிலிருந்து இந்த சீசன் முடிவிலேயே லயோனல் மெஸ்ஸி விரும்பினால் விலகிக் கொள்ளலாம் என்று அந்த அணியின் தலைவர் ஜோசஃப் மரியா பார்டமு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மொத்தம் 5 முறை Ballon d’Or கவுரவத்தை வென்ற மெஸ்ஸி, கடந்த 2017ம் ஆண்டு, பார்சிலோனா அணியுடன் 4 ஆண்டு ஒப்பந்தத்தை செய்திருந்தார். இதன்மூலம் அவர் 2021ம் ஆண்டுவரை அணியில் நீடிக்க வேண்டுமென்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது அவர் விரும்பினால் இந்த சீசன் முடிவிலேயே வெளியேறலாம் என்ற சலுகை பார்சிலோனா அணி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
“கார்லெஸ், புயோல் மற்றும் ஆண்ட்ரஸ் போன்ற வீரர்களுக்கும் இதற்கு முன்னதாக இத்தகைய சலுகை வழங்கப்பட்டுள்ளது. அந்த வீரர்கள் அத்தகைய சலுகைகளை அனுபவிக்க தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் அணிக்கு அளித்துள்ள பங்களிப்பு மிக அதிகம் என்பதால், நாங்கள் அவர்களின் விலகல் முடிவில் அதிகம் தலையிடக்கூடாது.
நாங்கள் வரும் 2021ம் ஆண்டுக்குப் பிறகும், பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நாங்கள் மிகவும் அமைதியாக இருக்கிறோம்” என்று அந்த அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.