சென்னை

சென்னை மாநகரில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள பகுதிகள் குறித்து சென்னை  மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்பு அதிகாரிகள் தொற்று நோய்க்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது வழக்கமாகும்.   குறிப்பாக மழைக்காலம் நெருங்கி வரும் வேளைகளில் கொசுக்கள் அதிகம் இருக்கும் என்பதால் கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.  அதையொட்டி சென்னையில் பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னை நகரில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு வி க நகர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்  பகுதிகளில் கொசுக்கள் குறித்த ஆய்வு கடந்த ஜூலை 19 முதல் 24 ஆம் தேதி வரை நடந்தது.  இந்த ஆய்வு குறித்து  சென்னை மாநகராட்சி ஆணையர் மதுசூதன் ரெட்டி, “நாங்கள் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

கொசுக்கள் அதிகமாக உள்ள இடங்களில் மாறுதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒவ்வொரு வீடு, காலி நிலங்கள், அலுவலகங்கள், அரசு கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் எனப் பல இடங்களில் கொசுக்களை அழித்துள்ளோம்.  தற்போது கொசுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள போதிலும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்துக்குப் பிறகு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வில் தண்டையார்பேட்டை,  வியாசர்பாடி, மாதவரம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.  எனவே இந்தப் பகுதி மக்களுக்கு டெங்கு நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.  எனவே இவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.