சென்னை:
நெம்மேலியில் செயல்பட்டு வந்த கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் 60 சதவிகிதம் அளவுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு பணி தடை பட்டுள்ளதால், தென்சென்னை பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு எழ வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைத்து செயல்படுத்தி வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு நெம்மேலியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆலையில் குடிநீர் தயாரிப்பு பணி 60சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் கடல் மாசு காரணமாக குடிநீராக்கும் பணிகள் தடைபட்டு வருவதாகவும், கடல் தண்ணீரை உறிஞ்சும் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணம் என்று கூறப்படுகிறது. கடல் நீரில் உள்ள மாசு மற்றும் கடல் உயிரினங்கள் குழாய்களில் சிக்கி இருக்கலாம் என்றும், இதனால், தண்ணீர் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 40 சதவிகிதம் அளவுக்கே ஆலையில் தண்ணீர் சுத்தரிகப்பு பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடல்நீரை உறிஞ்சும் குழாய்கள் கடலுக்குள் ஆறு முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் மூழ்கி இருப்ப தால் அவ்வப்போது பராமரிப்பு செய்வது இயலாத காரியமாகிறது என்றும், தற்போது ஆலை முழுத்திறனுடன் இயங்கவில்லை என்பதையும் அதிகாரி உறுத்திப்படுத்தி உள்ளர்.
குழாய்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான சோழிங்க நல்லூர் முதல், ஆதம்பாக்கம், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் பெருங்குடி பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில், குடிதண்ணீர் வழங்குவதில் சிக்கல் எழ வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.