சென்னை:
மாநிலத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான சென்னை மாநிலக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது 103வயதில், ஆசிரியர் தினத்தன்று கல்லூரிக்கு வந்து அங்குள்ள மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
செப்டம்பர் 5ந்தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரிக்கு 103 வயது பார்த்தசாரதி என்பவர் திடீரென விஜயம் செய்தார். அவர் வருகையை வியப்போடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் தான் படித்த வகுப்பறைக்குள் நுழைந்து அமர்ந்து, அங்குள்ள மாணவ மாணவிகளிடையே உரையாடினார். இது மாணவர்களிடையே உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.
பார்த்தசாரதி கடந்த 1938ஆம் ஆண்டு சென்னை எ மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். பின்னர் டெல்லியில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி ஓய்வுக்கு பின் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார்.
இந்த தள்ளாத வயதிலும் யாருடைய உதவியும் இன்றி தானே தன்னுடைய பணியை செய்து வரும், மாநிலக்கல்லூரிக்கு வருகை தந்து, தான் அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்து, தன்னுடைய மலரும் நினைவுகளை இன்றைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரை பொன்னாடை போர்த்தி கல்லூரி முதல்வர் ராவணன் கவுரவித்தார். மாணவர்களுக்கு அறிவுரை கூறிய முதியவர் மற்றும் முன்னாள் மாணவர், இன்றைய உலகில் வெறும் கல்லூரி படிப்பு மட்டும் போதாது என்றும் உலக அறிவும் நவீன டெக்னாலஜி அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு பைபை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.