டில்லி:
மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற கெஜ்ரிவால் அரசின் அறிவிப்புக்கு உச்சநீதி மன்றம் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
டில்லியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 6ந்தேதி அன்று அறிவித்தார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்களுக்கு இலவச பயணம் என்ற டெல்லி அரசின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் லாபகரமாக இயங்காது என்று எச்சரிக்கை செய்தனர்.
மேலும், இதுபோன்ற இலவசங்களை அளிப்பதற்கு பதிலாக மக்களின் வரிப்பணத்தை முறையாக பயன்படுத்துங்கள் என்றும் டில்லி மாநில அரசுக்கு அறிவுறுத்தினர்.
டில்லியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் ஆம்ஆத்மி மாநில அரசு அதிரடியாக அறிவித்தது. “இந்த இலவச பயண அனுமதி திட்டத்துக்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப் போவதில்லை. டில்லி மாநில அரசே இதற்கான முழு நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ளும். இந்த புதிய திட்டம் 2-3 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படும்” என்றும், இதற்காக டில்லி மாநில அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது.
டில்லியில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவைப் பெற இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
டில்லி மாநில அரசின் இந்த இலவச பயணத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதி மன்றம் டில்லி மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.