சென்னை:

ன்று ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் பட்டது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 377 ஆசிரியர்களுக்கு, இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில்  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புதுமையாக கற்பித்தல் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன்,  10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருதுகளை வழங்கிப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 90ஆயிரம் பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும்,   முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.