மும்பை: மராட்டிய தலைநகரத்தின் வைல் பார்லே பகுதியில் கடந்த 1929ம் ஆண்டு நிறுவப்பட்டு, சுமார் 87 ஆண்டுகளாக இயங்கிவந்த பார்லே ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது.
ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பளித்த இந்நிறுவனம், மோடி அரசினால் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது என்றும், கடந்த சில ஆண்டுகளாக குறைவான உற்பத்தியில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனம், இறுதியாக தனது இயங்குதலை நிறுத்திக் கொண்டது.
இது இந்தியாவின் மிகப் பழமையான பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றதாகும். அதேசமயம், பார்லே என்ற பிராண்டிற்கு ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மராட்டியம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களிலும் தொழிற்சாலைகள் இருக்கின்றன.
அவை, தொடர்ச்சியாக இயங்கும் எனவும், ஃப்ரூட்டி, போர்போன் உள்ளிட்ட தனது உற்பத்திப் பொருட்களை அத்தொழிற்சாலைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மூடப்பட்டது குறித்து பலரும் இணையதளங்களில் தங்களின் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். இத்தனையாண்டுகள் தங்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த மும்பை பார்லே நிறுவனம் இன்று இல்லை என்பதை தங்களால் ஏற்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.