லண்டன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அரசு ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு செய்து பிரெக்ஸிட் மசோத்னவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவு பெற அப்போதைய பிரதமர் தெரசா மே பெரிதும் முயற்சி செய்தார். ஆயினும் அவர் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பிரதமராகப் பதவி ஏற்ற போரிஸ் ஜான்சன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் என்னும் முடிவில் உறுதியாக இருந்தார்.

பிரெக்ஸ்ட் மசோதாவை நிறைவேற்ற இவரும் முயன்றார். ஆயினும்  பாராளுமன்றத்தில் எதிர்ப்பு இருந்ததால் மசோதா நிறைவேறாமலேயே இருந்தது. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் லீ என்பவர் நேற்று கட்சி விலகி  எதிர்க்கட்சியில் இணைந்தார். இதையொட்டி போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார்.

கட்சி மாறிய பிலிப் லீ தாம் பிரெக்ஸிட் மசோதாவை எதிர்த்து கட்சி  மாறியதாக அறிவித்துள்ளார். எனவே போரிஸ் ஜான்சன் அரசு கவிழும் நிலையில் உள்ளது  இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து விட்டுத் தேர்தலை முன் கூட்டியே அதாவது அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.