டில்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறிய ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது பாஜக அரசின் அராஜகத்தை தோலூரித்துக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு பெய்த பேய்மழை காரணமாக கேரள மாநிலம் கடுமையான பாதிக்கப்பட்டபோது, சாதாரண மனிதர்களைப் போல களத்தில் இறங்கி  நிவாரணப் பணிகளை  மேற்கொண்டவர்  ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன்.

கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் கடந்த 2012 ஆம் வருடம் ஐஏஎஸ் பணியில் இணைந்தார். தற்போது, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பகுதியில்  பணி புரிந்து வருகிறார்.

சமீபத்தில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு, காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்ட செயலை கடுமையாக விமர்சித்திருந்தார். காஷ்மீரில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக தனது ஐ.ஏ.ஏஸ் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

ஆனால், அவரது ராஜினாமா ஏற்கப்படாத நிலையில், ராஜினாமா ஏற்கப்படும் வரை, பணியில் தொடருமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கோபிநாத்துக்கு ஒழுங்க நடவடிக்கை  நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மோடி அரசின் பகிரங்க மிரட்டல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கிடையில், கோபிநாதன் மீது  ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாகவும், அதுகுறித்து விளக்கம் கேட்டு உள்ளதாகவும், ஆனால், கோபிநாதன் அதற்கு பதில் அளிக்காமல், சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் விவகாரத்தை கூறி திசை திருப்பி, ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

தன்மீது நடைபெறும் துறைரீதியான விசாரணையை திசைதிருப்பவே கோபிநாதன் ராஜினாமா நாடகம் ஆடியதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால், தன்மீதான  குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கோபிநாதன் இதுவரை எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை.