மும்பை:
நாட்டில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மைக்கு சான்றாக மும்பை ஐஐடியில் எம்டெக் படித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ரெயில்வேயின் ‘குரூப் டி’ தேர்வை எழுதி சாதாரண டிராக்மேன் வேலைக்கு சென்றுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் ரயில்வேத் துறையில் காலியாக இருந்த குரூப் டி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 17ம் தேதி முதல் டிசம்பா் 17ம் தேதி வரை நடைபெற்றது. இதில், மொத்தம், 1.7 கோடி பேர் பங்கேற்றனர். தற்போது, இத்தேர்விற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், வடமாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு 100க்கு 102, 109, 354 என மதிப்பெண்களை வாரி வழங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான மும்பை ஐஐடியில் எம்.டெக் படித்த பீகாரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஷரவன் குமார் ரெயில்வே நடத்தும், சாதாரண கடைநீர் ஊழியர் பணிக்கான குரூப் டி தேர்வு எழுதி, டிராக் மேன் தன்பாத் பகுதியில் பணியில் சேர்ந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது பல மூத்த ரயில்வே அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய உயர்ந்த தகுதி வாய்ந்த மனிதர் “டி” பதவியில் சேருவார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
ஷரவன் குமார், தற்போது தன்பாத் ரயில்வே டிவிஷனில் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார். சந்திரபுரா மற்றும் டெலோ பிரிவுக்கு இடையிலான பாதையை பராமரிப்பதை கவனித்து வருகிறார்.
அதிகரித்துவரும் வேலையின்மை காரணமாக, எந்தவொரு சிறிய வேலையானாலும், அரசாங்க வேலை பெற்று விட வேண்டும் என்ற வேட்கை காரணமாகவும், ஷரவன் குமார் இந்த பணியில் சேர்ந்ததாகவும், தனது வாழ்க்கையை எண்ணியும், வாழ்க்கை பாதுகாப்பும்தான் இந்த வேலையில் சேர காரணம் என்றும் கூறி உள்ளார்.
வேலைவாய்ப்புக்கு பெயர்போன இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடியில் பிடெக், எம்.டெக் படித்தும், தகுந்த வேலையின்றி, சாதாரண டிராக்மேன் வேலைக்கு சென்றுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.