மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி.
இன்றைய தினம் அவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தை யின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அவருக்கு பிடித்த தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெயையும் கலந்தும் பக்தர்கள் ‘தஹிகலா’ தயாரிப்பதுண்டு. கிருஷ்ணர் மாடு மேய்க்கும்போது, கோபியர்கள் கொண்டு வரும் சாதங்களையும் கலந்து உண்பார். அதை இன்றும் பின்பற்றும் விதமாக, தஹிகலா தயாரிப்பது, வெண்ணெய் தாழியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதுவே உறியடி விழாவாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். வரியைக் கட்ட மக்கள் வெண்ணெய் விற்க வேண்டிய தாயிற்று. கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவினை விமரிசையாக கொண்டாடுகின்றனர் .பல இடங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படு கின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படு கின்றன.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மக்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்த வுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய், பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.
இன்று கிருஷ்ணனை வழிப்பட உகந்த நேரம்:
அஷ்டமி திதி ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை காலை 8.08க்கு தொடங்கி நாளை காலை (ஆகஸ்ட் 24) 8.31மணிக்கு முடிகிறது.
பூஜை செய்ய நல்ல நேரம்
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை உள்ளது.
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரைக்கும் நல்ல நேரம் உள்ளது.
காலையில் பூஜை செய்வதை விட மாலையில் பூஜை செய்வது சிறப்பானது.
கிருஷ்ணன் அருளிய கீதாச்சாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
இன்றைய தினம் கிருஷ்ணனை வழிபட்டு ஆசிகள் பெறுவோம்…