துபாய்
துபாயில் யோகாவின் மூலம் 10 நாட்களில் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களை நீக்க முடியும் என அறிவிக்கப்பட்ட விளம்பரத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகெங்கும் யோகா பரவி வருகிறது. யோகா என்பது ஒரு உடற்பயிற்சிக்கலை என்பதையும் தாண்டி அதன் மூலம் பல நோய்கள் நீங்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்தியாவின் பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா ராம்தேவ் அடிக்கடி அவ்வாறு கூறி வருகிறார். ஆனால் அவர் தனது உடல்நிலைக் கோளாறுக்கு அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டதாக வந்த செய்தி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
துபாய் நகரில் சஞ்சீவ் கிருஷ்ணா யோகா மையம் அமைந்துள்ளது. இந்த யோகா மையத்துக்காக நகரில் பல இடங்களில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பரத்தில் யோகாவின் மூலம் 10 நாட்களில் மனச்சோர்வு, நீரிழிவு, ஒற்றை தலைவலி உள்ளிட்ட பல நோய்களை நீக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஸகிரா மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவரான கிரிஷ் ஜுனேஜா, “இது மக்களை தவறான பாதையில் செலுத்தும் அபாயகரமான தகவல் ஆகும். இதன் மூலம் மக்கள் தாங்கள் சாப்பிட்டு வரும் மருந்து வகைகளை நிறுத்த தூண்டும் நிலை உண்டாகும். இதனால் அவர்கள் உடல் பாதிப்பு அடைந்து அபாயகரமான நிலையை அடையக் கூடும்.
நான் நகரின் பல இடங்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சுகாதார அமைச்சகத்துக்குப் புகார் அளித்தேன். என்னைப் போல் பல மருத்துவர்கள் புகார் அளித்துள்ளனர். யோகாவின் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் நீரிழிவு நோயை அதுவும் 10 நாட்களில் நிச்சயம் நீக்க முடியாது.: எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யோகா மைய உரிமையாளர் சஞ்சீவ் கிருஷ்ண, “அந்த விளம்பரம் எனது மாணவர் ஒருவர் தனது சொந்த செலவில் வைத்துள்ளார். அவர் தனது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள அவ்வாறு செய்துள்ளார். நாக்கள் இதுவரை எந்த ஒரு நோயையும் யோகாவின் மூலம் 10 நாட்களில் நீக்க முடியும் எனக் கூறியது இல்லை. இந்த பயிற்சியைப் பற்றிப் புரிந்துக் கொள்ள 10 நாட்கள் ஆகும் எனவும் அதன் பிறகு இந்த நோயில் இருந்து விடுபடலாம் எனவும் நான் தெரிவித்து வருகிறேன்”எனக் கூறி உள்ளார்.
இந்த விளம்பரத்தை நகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது