சென்னை:
தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.
தமிழகத்திற்கு வரி வருவாய் மற்றும் டாஸ்மாக் வருமானம் தவிர வேறு எந்தவித வருமானமும் இல்லாத நிலையில், அதிகரித்து வரும் கடன் காரணமாக நிதிச்சுமையில் சிக்கி தமிழக அரசு தள்ளாடி வருவதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக திட்டப் பணிகள் முடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த வருவாய்: ரூ. 197721.17 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரும் நிதியாண்டில் பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருவதாகவும், கடனை பொறுத்த வரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. அதுபோல, வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் கடன் சுமை கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இந்த நிதிச்சுமையை தமிழக அரசு எப்படி சமாளிக்கப்போகிறது மில்லியன் டாலர் கேள்வி….
தமிழக அரசு கடந்த 1984ம் ஆண்டு முதல்வாங்கிய கடன் விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது.
1984 – 85ம் நிதியாண்டில், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபொழுது 2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது.
அதே கடன் 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக ஆட்சியை விட்டு விலகிய போது, ரூ.28,685 கோடியாக அதிகரித்து. அதாவது 2129 கோடி 14 மடங்கு உயர்ந்து 28,165 கோடியாக உயர்ந்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் வாங்கிய கடன் ரூ.28,685 கோடியாக இருந்த நிலை யில், கடந்த 10ஆண்டுகளில் மட்டும் அரசு வாங்கிய கடன் தொகை மட்டும் ரூ.60,000 கோடி..
கருணாநிதி – ஜெயலலிதா ஆகிய இரு முதல்வர்களும் ஆட்சி செய்த நிலையில் 31.3.2006 அன்று தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக அதிகரித்தது. அதாவது 5 ஆண்டில் கடன் சுமை இரட்டிப்பானது.
இந்த கடன் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடி என அறிவிக்கப்பட்டது. அதாவது கடன் சுமை கடந்த 2006ம் ஆண்டை விட 100 மடங்கு அதிகரித்து.
பின்னர் 2011ம் ஆண்டு ஜெ. ஆட்சிக்கு வந்தபோது தமிழகஅரசு நிதிச்சுமையில் தள்ளாடியது. 2011ஆம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்த நிலையில், 2012ம் ஆண்டு, அது மேலும் அதிகரித்து ரூ.1,30,630 கோடியாகவும், 2013ம் ஆண்டில் ரூ.1,52,810 கோடியாகவும் உயர்ந்தது மக்களின் தலையில் மேலும் சுமையை ஏற்றியது.
2014ம் ஆண்டில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.1,71,490 கோடியாகவும் அதிகரித் தது. அதன்பின் 2015-ல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி கடன் ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்தது. 2015-16ம் ஆண்டில் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2016-17ம் நிதி ஆண்டுக்காக ஓபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில், 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், 2017-18ம் ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் தமிழகத்தின் கடன் தொகை ரூபாய் 3.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
தணிக்கைத்துறை அறிக்கை என்ன சொல்கிறது?
தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18ம் நிதி ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 46 ஆயிரத்து 279 கோடி என்றும், அதில் வருவாய் ரூபாய் 93 ஆயிரத்து 737 கோடி ஆகும்.
வருவாய் செலவினம் ரூபாய் 1 லட்சத்து 67 ஆயிரத்து 873 கோடி. 2016-17 ஆண்டு முடிவில் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக இருந்த கடன் 2017-18ம் ஆண்டு முடிவில் ரூபாய் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்துள்ளது. இது 15.22 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் செலவீனங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி 2016-17 நிதியாண்டில் ரூபாய் 11 ஆயிரத்து 216 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ரூபாய் 8 ஆயிரத்து 911 கோடியாக குறைந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் 14வது நிதிக்குழு ஆணைய பரிந்துரை களின் படி மத்திய அரசிடம் இருந்து ஊராட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியங்கள் பெற முடியாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி குறைந்துள்ளது.
2012-17 வரையிலான அமைப்புகளுக்கு தொடர்புடைய மிகை செலவினமான ரூ.1099 கோடியே 58 லட்சம் சட்டசபையில் முறைப்படுத்தப்படவில்லை.
அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த ரு.1627 கோடி நிதி உபயோகப்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து உள்ளது.
மேலும், நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்தப்புள்ளிகள் முடிக்கப்படாத தன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் ரூபாய் 1022 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவிரி பாசன பகுதியில் தட்பவெட்ப நிலை மாறுதலால் ஏற்படும் தாக்குதலை மட்டுப்படுத்தும் திட்டம், தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்டம், நீர் பாசன கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர்வள மேலாண்மை குழு குடி மராமத்து மற்றும் மறு சீரமைப்பு பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அணைகளை புனரமைத்தல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த நிதி பயன்படுத்தப்படாததால் ரூபாய் 1,729 கோடி திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய மூலதன நிதியின் கீழ் கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டத்தின் மூலம் புயலால் பாதிக்கப்படாத மின் இணைப்பு அமைத்தல் போன்ற திட்டங்களை நடை முறைப்படுத்த நிதிகள் பயன்படுத்தப்படாததால் ரூபாய்1493 கோடி நிதி திரும்ப ஒப்படைக்கப் பட்டுள்ளது.
2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியின்படி அரசில் ரூபாய் 1276 கோடியே 27 லட்சம் முதலீடு செய் யப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான 134 திட்டமிட்ட நிறைவு தேதிக்கு பிறகும் முடியாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
2015-16ம் நிதி ஆண்டில் ரூபாய்6 ஆயிரத்து 156 கோடியாக இருந்த திருமண உதவி திட்டம், இலவச மடிக்கணினி மற்றும் சீருடை வழங்குதல் போன்ற இலவச திட்டங்களின் மதிப்பு கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 433 கோடியாக குறைந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2011-2012 ஆம் ஆண்டில் அரசின் வரவு
சேமநல நிதி முதலிய பொறுப்புகளை உள்ளடக்கிய மாநில அரசின் மொத்தக் கடன் 31.3.2011 அன்று ரூபாய் 1,01,349.45 கோடியாக இருந்தது.
மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூபாய் 59,787 கோடி
வணிக வரிகளின் வரவு ரூபாய் 37,196 கோடி
ஆயத்தீர்வை வரவுகள் ரூபாய் 10,191 கோடி
முத்திரைத்தாள் தீர்வை ரூபாய் 6,493 கோடி
மத்திய அரசு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழக அரசின் பங்கு, சேவை வரியைப் பொறுத்த வரையில்ரூபாய் 13,111 கோடி
வரி அல்லாத வருவாய், ரூபாய் 4,483.72 கோடி
2019-2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு
தமிழ்நாட்டில், டாஸ்மாக் மூலம் வருவாய் வரவினம் 6,724.38 கோடி
முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் பெறப்படும் வருவாயாக 13,122.81 கோடி
வாகனங்கள் மீதான வரி வருவாய் 6,510.70 கோடி ரூபாயாக
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவினங்கள் 1,24,813.06 கோடி
மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 13,326.91 கோடி ரூபாயாக என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில், தமிழ்நாட்டிற்கான பங்கு 33,978.47 கோடி ரூபாயாகவும் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பெரும்பாலான நிதி அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும், அரசு வழங்கும் இலவசங்களுக்கும் மட்டுமே செல்கிறது.
2019-2020 நிதிநிலைக் குறியீடுகள்
141. 2018-2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்,
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 1,80,618.71 கோடி ரூபாயாகவும்,
வருவாய்ச் செலவினங்கள் 1,99,937.73 கோடி ரூபாயாகவும் இருக்கும்.
இதன் விளைவாக, 2018-2019 ஆம் ஆண்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை 19,319.02
2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 31ந்தேதி அன்று, தமிழக அரசின் நிகர நிலுவைக் கடன்கள் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும் (தோராயமாக 4 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.
2018-2019ம் ஆண்டிற்கான மாநிலத்தின் வரி வருவாய் வரவினங்கள் 1,10,178.43 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் நிதி பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, மாநில அரசின் மீது மக்களின் மன நிலையோ கடும் அதிருப்தியில் உள்ளது.
தமிழகத்தை வாட்டி வரும் தண்ணீர் பிரச்சினை, நீர்நிலைகள் சரியான முறையில் தூர் வாரப் படாதது, மழைநீர் சேகரிப்பில் மெத்தனம், அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கு உள்பட பல்வேறு செயல்களின் அரசின் நடவடிக்கை மெச்சும்படி இல்லை.
அதுபோல, பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரசு மருத்துவமனைகளில் மக்களை மதிக்காமை, அரசு போக்குவரத்து பேருந்துகளின் அவலநிலை, கல்வியில் மந்த நிலை போன்றவற்றால் மக்கள் ஆளும் தமிழக அரசு மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், அரசியல் கட்சிகள் இலவச டிவி, கிரைண்டர், மிக்சி, ஆடு மாடு, லேப் டேப் என பல்வேறு இலவசங்களை வழங்கி மக்களை அடிமைப்படுத்தி வரும் நிலையில், இன்று தமிழக அரசின் கடன்சுமை எகிறி வருகிறது.
உலக வங்கி மற்றும் மத்தியஅரசு இலவசங்கள் வழங்கப்படுவதை தவிர்க்க கூறினாலும், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டும் ஆட்சியைப் பிடிக்க இலவசங்களை வாரி வழங்குவதாகவே அறிவித்து வருகின்றன.
2021ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக அரசின் மொத்த கடன் மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழக அரசு எப்படி கரையேறப் போகிறது என்பது தெரியவில்லை. பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில், அதனால் ஏற்படும் செலவினங்களை சமாளிக்க உடனடி நிதி தேவைப்படும் பட்சத்தில், தற்போதே நிதிச்சுமையில் தள்ளாடி வரும் தமிழகஅரசு என்ன செய்யப்போகிறது என்பது பொருளாதார வல்லுநர்களிடையே எழுப்பப்படும் மில்லியன் டாலர் கேள்வி….
2017ம் ஆண்டு இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் ஒவ்வொரு நபரின் தலையிலும், சராசரியாக 28,778 ரூபாய் கடன் இருப்பதாக அறிவித்தது. இதே நிலை நீடித்து வந்தால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையில் மேலும் பல ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏறிக்கொண்டே செல்லும் என்பதில் வியப்பேதுமில்லை.
மக்களுக்கு வழங்கும் இலவசங்கள், நமது மாநில மக்கள் ஒவ்வொருவர் தலையிலும்தான் ஏறுகிறது என்பதை மக்கள் எப்போது புரிந்துகொள்ள போகிறார்கள்… ஆட்சியாளர்கள் எப்போது இலவசங்களை நிறுத்தப்போகிறார்கள்….? இலவசங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே நிதிச்சுமை குறையும் வாய்ப்பு உருவாகும்….
Thanks: Data Source – Dinamani