டில்லி
பாபர் மசூதியில் கோவில் கட்டுமானம் இருந்ததாக ராம் லல்லா விராஜ்மன் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு தற்போது தினசரி விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மூன்று தரப்பினரும் தங்கள் வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் போப்டே, சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இன்று ராமர் கோவில் கட்டக் கோரி உள்ள ராம் லல்லா விராஜ்மான் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் வைத்திய நாதன் தனது வாதத்தை முன் வைத்தார். வைத்தியநாதன் தனது வாதத்தில் தொல்லியல் துரை ஆய்வு அறிக்கையில் மசூதியினுள் ஒரு பெரிய கட்டுமானத்தைத் தாங்கும் அளவிலான தூண்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளதை மேற்கோளாகக் காட்டி உள்ளார். அத்துடன் அந்த தூண்களில் ஆமை மற்றும் முதலையின் உருவங்கள் செதுக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய உருவங்கள் செதுக்கப்பட்ட தூண்கள் இஸ்லாமியக் கட்டிடங்களில் கிடையாது எனக் கூறிய அவர் சுன்னி வக்ஃப் வாரியம் உள்ளிட்டோர் முதலில் அங்கு இஸ்லாமியக் கட்டுமானம் இருந்ததாகக் கூறி விட்டு அதன் பிறகு எந்த ஒரு கட்டுமானமும் அங்கு இல்லை எனத் தெரிவித்ததையும் தனது வாதத்தில் எடுத்துரைத்தார்.