கல்கா: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்று நடத்தப்பட்டால், அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றியதாகத்தான் இருக்குமேயொழிய, வேறு எது குறித்தும் அல்ல என்று கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஹரியானாவில் நடைபெற்ற ஒரு பேரணியில் அவர் பேசியதாவது, “எல்லைத்தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபாடு மற்றும் நிதியளித்தல் போன்றவற்றை பாகிஸ்தான் கைவிடும்வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது.
அப்படியே பேச்சுவார்த்தை என்று எதுவும் நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றியதே. வேறெந்த விஷயம் குறித்தும் பேசவேண்டிய தேவையில்லை.
காஷ்மீர் தொடர்பான நமது நடவடிக்கையால் பாகிஸ்தான் பலவீனப்பட்டுள்ளது. எனவே, பல நாடுகளின் கதவுகளை அது தட்டிக்கொண்டு நமக்கெதிராக செயல்பட துடிக்கிறது. நாம் செய்த தவறு என்ன?
பாகிஸ்தான் நம் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலமாக, நமது நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைத்து நம்மை பலவீனப்படுத்த நினைக்கிறது. வலிமை வாய்ந்த நாடான அமெரிக்காவே, இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை. நம்முடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறிவிட்டது” என்று பேசியுள்ளார்.