விஜயவாடா: முந்தைய சந்திரபாபு நாயுடு அரசின் ரூ.38000 கோடி செலவினங்கள் தொடர்பான கணக்கு வழக்குகள் தற்போதைய அரசின் ஒப்புதல் பெறவேண்டி காத்துக்கொண்டுள்ளது. இதில் பல செலவினக் கணக்குகளைக் கண்டு, தற்போதைய அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றில் ரூ.10000 கோடி அளவிலான செலவினங்கள், தேவையற்றவை மற்றும் வீணானவை என்று ஜெகன்மோகன் அரசால் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கவும் முதல்வர் ஜெகன்மோகன் மறுத்துள்ளார்.

போலாவரம் நீர்ப்பாசன திட்ட இடத்தை பார்வையிடுவதற்காக, மாநிலம் முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு பேருந்துகளில் அழைத்துச் செல்வதற்காக ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்டப்பட்டுவரும் மாநிலத்தின் புதிய தலைநகரை பார்வையிடுவதற்காக மக்களை அழைத்துச் சென்றதற்காக ரூ.200 கோடி செலவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத் தரம் மிக மோசமாய் உள்ளதாகவும், மழையின்போது நீர்கசிவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தக் கட்டுமானத்திற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.11000 செலவானதாக குறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர், மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடியதற்கு அரசு பணம் செலவானதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. இத்தகைய கணக்குகளால், தற்போதைய ஜெகன்மோகன் அரசு அதிர்ச்சியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]