சென்னை
மத்திய அரசு அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதாக தமிழக முஸ்லிம் லீக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த அஞ்சல் அட்டைகள் கடந்த சில நாட்களாகக் கிடைக்காமல் உள்ளது. இந்த அஞ்சல் அட்டையின் விலை ஐம்பது பைசா என்பதால் பல ஏழை மக்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது பெரும்பாலான அஞ்சலகங்களில் அஞ்சல் அட்டை கிடைப்பதில்லை என்பதால் மக்கள் பெரும் துயரடைந்துள்ளன்ர். இது குறித்து தமிழக முஸ்லிம் லீக் தலைவர் வி எம் எஸ் முஸ்தபா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் முஸ்தபா, “இந்திய அஞ்சல் துறை மொத்தம் 154000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். அஞ்சல் துறையின் மூலம் அஞ்சல் தலை, அஞ்சல் அட்டை, கடித உறைகள், பதிவு அஞ்சல், மூலம் பணம், அனுப்புதல், அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை, மின்னணு அஞ்சல், இணையவழி பில் தொகை செலுத்துதல், விரைவு தபால் சேவை, செல்வமகள் சேமிப்பு திட்டம், வங்கி சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல சேவைகளை நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் தபால் சேவைகளை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சல் அட்டைகளைத் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் அமைப்பு என பல்வேறு சிறு,சிறு அமைப்பினர் உள்பட மக்களும் அஞ்சல் அட்டை சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி 50 காசில் வெளிவரும் இந்த அஞ்சல் அட்டைகளுக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது வேதனை அளிக்கிறது.
ஏற்கனவே, 160 ஆண்டு சேவையான தந்தி சேவையை 2013ம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தி விட்டது. இந்த நிலையில், தற்போது அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்த இருப்பது, தபால் துறையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்படுகிறது. ஆகவே பாமர மக்கள் பயன்படுத்தி வரும் அஞ்சல் அட்டை விற்பனை உடனடியாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.