புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிர்ப்பாக 21 வாக்குகளும் பதிவாகின.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக ராஜ்யசபாவில் அறிவித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேலும், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான மசோதாவையும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார் அமித்ஷா.
இந்த மசோதா மீதான விவாதம் நேற்று காலையில் தொடங்கியது. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மசோதாவை எதிர்த்து ஆற்றிய உரை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த மசோதாவிற்கு அதிமுக மட்டுமல்ல, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட பாரதீய ஜனதாவுக்கு ஆகாத கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும், பிஜு ஜனதாதளக் கட்சியின் ஆதரவும் கிடைத்தது.
பின்னர் நடந்த வாக்கெடுப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குரல் வாக்கெடுப்பில் பிரச்சினை ஏற்படவே, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனையடுத்து, மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாக, மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.