பெங்களூரு :

ர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. எத்னால் மீது ரூ.204கோடி நஷ்டஈடு கேட்டு முன்னாள் அமைச்சர்  டி.கே.சிவகுமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் டி.கே.சிவக்குமார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 23-ந் தேதி விஜயாப்புரா மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான எத்னால்  செய்தியாளர்களை சந்தித்தபோது,  “டி.கே.சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தது தொடர்பான  வழக்குகளில் இருந்து விடுவிக்க பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மத்திய மந்திரிகளிடம் உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்தார் என்றும்,  அவ்வாறு அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தால், அதற்கு பிரதிபலனாக கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்று மத்திய மந்திரிகளிடம் டி.கே.சிவக்குமார் கூறினார் என தெரிவித்திருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டி.கே.சிவக்குமார் தன் மீதான குற்றச்சாட்டை உடனே மறுத்திருந்தார்.

இந்த நிலையில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பசன்கவுடா பட்டீல் எத்னால் கூறி இருப்பதாகவும், இதனால் காங்கிரஸ் கட்சியில் மட்டும் அல்லாமல், மாநில மக்களிடையே தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறி ராமநகர் மாவட்ட கோர்ட்டில் எத்னால் எம்.எல்.ஏ.விடம் ரூ.204 கோடி கேட்டு டி.கே.சிவக்குமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.