சென்னை:
நீட் மசோதா குடியரசுத் தலைவரால் 2017ம் ஆண்டு நிராகரிப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளாக அதை ஏன் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு சேர மாணவர்களுக்கு நீட் தேர்வை கடந்த 2 ஆண்டுகளாக அமல்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகம், கடந்த 2017ம் ஆண்டே சட்டமன்றத்தில், நீட் விலக்கு கோரி குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக மத்தியஅரசுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால், அந்த மசோதா நிராகரிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தமிழகஅரசு மவுனம் காத்து வந்தது.
இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை 2017ஆம் ஆண்டே குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவிட்டுவிட்டார் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், சட்ட மசோதாவை மத்திய அரசு நிராகரித்த தேதி, தமிழக அரசு திரும்பப் பெற்ற தேதி ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சன துணைச் செயலாளர் ராஜிஸ் எஸ்.வைத்யா, நீட் தேர்விலிருந்து விலக்களித்து தமிழக அரசு அனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களும் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்தன. அன்றே அதனை சுகாரத்துறைக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் அனுப்பிவிட்டது. பின்னர் அந்த இரு துறைகளிலும் கருத்துகள் பெறப்பட்டு செப்டம்பர் 11ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இதனை தமிழக அரசு பெற்றுக் கொண்டதற்கான ஆவணங்களும் இந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இது குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசினால் நீட் மசோதா திரும்ப அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஏன் இதனை சட்டப்பேரவையில் தெரிவிக்கவில்லை? இந்த 2 ஆண்டுகளில் மீண்டும் புதிய மசோதாவை நிறைவேற்றி இருக்கலாமே ஏன் அது குறித்து அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வரும் 13ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.