தூத்துக்குடி: மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த காரணத்திற்காக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
‘விர்கோ 9’ என்ற இழுவைப் படகில் இவர் பயணம் செய்தார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்த செய்தி தொடர்பான உறுதித்தன்மையைப் பெறுவதற்கு அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதீப் மீதான பல்வேறான குற்றச்சாட்டுகளை மாலத்தீவு நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தபிறகே அவர் இந்தியாவிற்கு பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், தொடர்ந்து நடைபெறும் விசாரணைகளுக்காக அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக இவர் வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஜுலை மாத துவக்கத்தில் இவர் மருத்துவ விடுப்பிற்காக இந்தியா வந்திருந்தார். இவர் இந்தியாவிலிருந்தபோது, வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என்றும் கருதப்பட்டு வந்தது.