டில்லி

நாட்டில் முதல்முறையாகப் பதவியில் உள்ள  நீதிபதி சுக்லா மீது வழக்குப் பதியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார்.

ஜி சி ஆர் ஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் என்னும் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடையை மீறி உத்திரப் பிரதேச அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நீதிபதி சுக்லா கடந்த 2017 ஆம் ஆண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டப்படி பதவியில் இருக்கும் நீதிபதி மீது வழக்கு தொடர முடியாது. அதற்கு  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே வழக்கு தொடர வேண்டும். இதையொட்டி நீதிபதிகள் குழு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீஅக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதினர். நீதிபதி சுக்லா பதவி விலக வேண்டும் அல்லது விருப்ப ஓய்வு பெற வேண்டும் என தீபக் மிஸ்ரா அறிவித்தார்.

ஆனால் தீபக் மிஸ்ரா கூறியதை சுக்லா ஏற்கவில்லை. தீபக் மிஸ்ராவுக்கு பிறகு தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ரஞ்சன் கோகாய் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். அத்துடன் நீதிபதி சுக்லா மீது வழக்குப் பதிய சிபிஐக்கு ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார்.

நாட்டில் முதல் முறையாகப் பதவியில் இருக்கும் நீதிபதி மீது வழக்குப் பதிய உச்சநீதிமன்ற நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.