டில்லி
சுற்றுச் சூழலை பாதிக்காத ரப்பரை அமைத்த கர்நாடக சிறுவர்கள் அமன் மற்றும் நசிகேத குமார் ஆகியோருக்கு கூகுள் விருது அளித்துள்ளது.
ரப்பர் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ரப்பர் பாலை ஃபார்மிக் அமிலத்தை கலந்து ரப்பர் ஷீட்டாக மாற்றப்படுகிறது. இவ்வாறு ஷீட்டாக மாற்றப்பட்ட பிறகு அந்த தட்டுகளில் உள்ள ஃபார்மிக் அமிலக் கரைசல் தரையில் கொட்டப்படுகிறது. அது நிலத்தினுள் சென்று சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்து வருகிறது. ரப்பர் பாலை ஷீட்டாக மாற்றிய பிறகு மட்டுமே அது அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.
இதை மாற்றக் கர்நாடகாவைச் சேர்ந்த இரு சிறுவர்கள் ஆலோசனை செய்து வந்தனர். அமன் மற்றும் நசிகேத குமார் ஆகிய இருவரும் இது குறித்த பரிசோதனை செய்யும் போது அமன் தாயார் முன்பு ஒருமுறை நடந்த நிகழ்வு குறித்து கூறியதை இருவரும் நினைவு கூர்ந்துள்ளனர். அமனின் தாய்வழிப் பாட்டனார் ஒரு ரப்பர் ஷீட் தயாரிப்பவர் ஆவார். அவர் ஒரு முறை ஃபார்மிக் அமிலம் தட்டுப்பாடு உண்டாகியதால் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
அப்போது அமனின் பாட்டனார் வீட்டுக் கொல்லை ஓரம் வளரும் புழிச்சக்காய் சாற்றை உபயோகித்துள்ளார். இது குறித்து அமனின் தாயார் சொன்னதைப் பின்பற்றி இருவரும் புழிச்சக்காய் சாற்றைப் பயன்படுத்தி ரப்பர் பாலை ஷீட்டாக மாற்றி உள்ளனர். முழுக்க முழுக்க ரசாயனக் கலப்பில்லாமல் இந்த சோதனை நடந்து வெற்றி கண்டுள்ளது. அதை ஒட்டி தேசிய புவியியல் கண்டுபிடிப்பாளர் விருதை இந்த இருவருக்கும் கூகுள் அளித்துள்ளது.
இது குறித்து அமன் மற்றும் குமார், “புழிச்சக்காய் என்பது பல வீடுகளில் தானாகவே வளர்வதாகும். இதில் எவ்வித ரசாயனமும் இல்லாததால் இந்த கலவை சுற்றுச் சுழலலைப் பாழாக்காது. அது மட்டுமின்றி ஃபார்மிக் அமிலம் மூலம் ரப்பர் ஷீட் தயாரிக்க சுமார் 16 மணி நேரம் ஆகும் போது புழிச்சக்காய் சாறு மூலம் 6 மணி நேரத்தில் இந்தப் பணி முடிந்து விடுகிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.