புதுடெல்லி: நாடு முழுவதிலுமுள்ள 23 ஐஐடி -களிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 2,400 மாணாக்கர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஐஐடி -களில் இருந்து இடைநின்ற மாணாக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது, மொத்த எண்ணிக்கையான 2,400ல் பொதுப்பிரிவு மாணாக்கர்கள் எண்ணிக்கை 1,290.
அவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை 1171. இளநிலை மற்றும் முதுநிலை ஆகிய படிப்புகளை மேற்கொள்ளும் இருதரப்பு மாணாக்கர்களுமே இடைநின்றவர்கள் பட்டியலில் உண்டு.
இடைநின்ற மாணாக்கர் எண்ணிக்கையில் ஐஐடி – டெல்லிதான் முதலிடம். 782 மாணாக்கர் அங்கே இடைநின்றவர்கள். அடுத்ததாக ஐஐடி – காரக்பூரில் 622 பேரும், ஐஐடி – மும்பையில் 263 பேரும், ஐஐடி – கான்பூரில் 190 பேரும், ஐஐடி – சென்னையில் 128 பேரும் அடக்கம்.
ஐஐடி -களில் இளநிலைப் படிப்புகளில் ஆண்டிற்கு 9,000 பேரும், முதுநிலைப் படிப்புகளில் ஆண்டிற்கு 8,000 பேரும் சேர்க்கப்படுகின்றனர். அதிக அழுத்தம், ஜாதிய பாகுபாடுகள், முதுநிலைப் படிக்கும் மாணாக்கர்கள் இடையிலேயே பணியில் சேர்ந்துவிடுதல் உள்ளிட்ட காரணங்களால் இடைநிற்றல் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.