புதுடெல்லி: மலேரியாவை வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து அகற்றுவது என்ற இலக்கோடு அரசு செயல்பட்டுவரும் நிலையில், மே 2019 வரை, 66,313 பேருக்கு மலேரிய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 13 மலேரிய மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தெரிவிக்கப்படுவதாவது; கடந்த 2015ம் ஆண்டில் 11,69,261 மலேரிய நோயாளிகளும், 2016ம் ஆண்டில் 10,87,285 மலேரிய நோயாளிகளும், 2017ம் ஆண்டில் 8,44,558 மலேரிய நோயாளிகளும், 2018ம் ஆண்டில் 4,29,928 மலேரிய நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதே ஒப்பீட்டின்படி, 2015ம் ஆண்டில் 384 மரணங்களும், 2016ம் ஆண்டில் 331 மரணங்களும், 2017ம் ஆண்டில் 194 மரணங்களும், 2018ம் ஆண்டில் 96 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
மேலும், கடந்த 2016ம் ஆண்டு மலேரிய பாதிப்பை ஒப்பிடுகையில், 2017ம் ஆண்டின் மலேரிய பாதிப்பு 24% குறைந்தது. மேலும், ஆண்டுதோறும் மலேரிய பாதிப்பில் 20% – 40% வரை குறைந்து வருகிறது.
இப்பிராந்தியத்திலேயே, அதிக மலேரிய பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா இருந்தாலும், மலேரிய பாதிப்பில் ஒரு ஆண்டிற்குள் 22% பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்கள்தான் இந்தியாவில் அதிக மலேரிய பாதிப்புக்கு ஆளாகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.