சென்னை: தமிழகத்தில் இதுவரை 4 சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 16 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 மாணாக்கர்கூட சேராத விநோதம் நேர்ந்துள்ளது.
மொத்தம் 11 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. மற்றபடி, 479 கல்லூரிகளில் உள்ள 54% இடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, 230 பொறியியல் கல்லூரிகளில் 30%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட வேண்டிய 167101 இடங்களில், இதுவரை 76364 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளாகவே, 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளால் 30% இடங்களைக்கூட முழுமையாக நிரப்ப முடியவில்லை. இதேநிலை நீடித்தால் அந்தக் கல்லூரிகள் 50% இடங்களை இழக்கும்.
ஏனெனில், ஒரு கல்லூரி தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் 30%க்கும் குறைவான மாணாக்கர் சேர்க்கையையே பெற்றால், அக்கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 50% இடங்களுக்கான அனுமதியை ஏஐசிடிஇ ரத்துசெய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.