டில்லி
பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2004 ஆம் வருடம் மே 14 முதல் 2009 ஆம் வருடம் ஜூலை 24 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மற்றும் அதே கூட்டணி இரண்டாம் முறையாக ஆட்சியைத் தொடங்கிய போதும் மும்பை பங்குச் சந்தை 203% வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2014 மே மாதம் 23 முதல் 2019 ஆம் ஆண்டு ஜூலை 23 வரை இந்த வளர்ச்சி 54% மட்டுமே ஆகி உள்ளது. தேசிய பங்குச் சந்தையிலும் இதே நிலை உள்ளது.
தற்போது மோடி மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளார். இந்த ஆட்சி அமைந்த 60 நாட்களில் சென்செக்ஸ் 1800 புள்ளிகள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் நிஃப்டி மற்றும்சென்செக்ஸ் அதிக அளவை எட்டி உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இந்த புள்ளி விவரங்கள் பெரிய நிறுவனப் பங்கு பரிவர்த்தனைகளை மட்டுமே கணக்கில் எடுப்பதாகும்.
இந்த கணக்கெடுப்பில் எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ,, ரிலையன்ஸ், ஸ்டேட் வங்கி, கோடாக் வங்கி, அதானி குழுமம் போன்றவைகள் கணக்கில் எடுக்கும் போது இவை என்றுமே நல்ல கிராக்கி உள்ள நிறுவனங்கள் ஆகும். அதே நேரத்தில் மகிந்திரா, டாடா மோட்டார், டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டார், ரிலையன்ஸ் கேபிடல், வோடோபோன் ஐடியா, மாருதி, சன் டிவி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் கடந்த ஒரு வருடமாகவே மதிப்பு குறைந்துள்ளன.
பொதுவாக சிறிய நிறுவனத்தில் அதிக லாபத்தைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்கின்றனர். ஆனால் சிறிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்து பெரிய நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளதால் பங்கு வர்த்தக சந்தையில் முன்னேற்றம் இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. தற்போது இந்த சந்தையில் சிறிய நிறுவனப் பங்குகள் மதிப்பு மேலும் குறைந்தால் இந்த இழப்பு மிகவும் அதிகரிக்கக் கூடும்.
நஷ்டமடைந்து வரும் நிறுவனங்களில் இருந்து அரசு தனது முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் அந்த நிறுவனங்களின் மதிப்பு மேலும் குறைகின்றது. இவ்வாறு மோடி அரசு அமைத்து 60 நாட்களில் சுமார் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய நிறுவனங்கள் பங்கு மதிப்பு மேலும் குறைந்து வருவதால் இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.