டெகரான்
அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் 17 உளவாளிகளுக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாட்டின் அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது. அத்துடன் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்து பல உலக நாடுகளுக்கு ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய தடை விதித்தது. மேலும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆளில்லாத கண்காணிப்பு விமானங்களை சுட்டு வீழ்த்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இரு நாடுகளும் ஒரு நாடு மற்றொரு நாட்டை உளவு பார்த்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ வில் பணிபுரியும் 17 பேர் கைது செய்யப்படுள்ளதகவும் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டு தொலைக்காட்சி இந்த உளவாளிகளுடன் தொடர்பில் இருந்த சிஐஏ அதிகாரிகள் படத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் சிஐஏ வின் உளவு வளையத்தை முறியடித்துள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால் அதற்கும் இந்த அறிவிப்புக்கும் சம்மந்தம் உள்ளதா என்பதை குறித்து தகவல்கள் வரவில்லை. ஈரான் ஊடகம் அளித்த செய்தியில் இந்த 17 பேரும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் அந்த செய்தியில், “இந்த உளவாளிகள் பொருளாதாரம், அணுசக்தி, உட்கட்டமைப்பு, ராணுவம் மற்றும் சைபர் கிரைம் போன்ற தனியார் பிரிவுகளில் பணி புரிந்து அங்குள்ள தகவல்களை அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளனர். இவர்களின் அதிகாரிகள் துபாயில் இருந்து ஆட்களை தேர்வு செய்து ஈரானுக்கு அனுப்பி வைக்கின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.