சென்னை: உப்பங்கழிகள் இயங்கிவரும் இடங்களுக்கான குத்தகை காலத்தை மத்திய அரசு நீட்டிக்க மறுத்ததால், தமிழ்நாட்டில் உப்பங்கழி தொழிலை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கை பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
பொதுவாக, உப்பங்கழி தொழில் சார்ந்தோருக்கு சூரியன்தான் நண்பன். மழை அவர்களுக்கு துன்பத்தை தரும் அம்சம். ஆனால், மத்திய அரசின் தற்போதைய முடிவு, உப்பங்கழி மக்களின் வாழ்வில் நிரந்தர மழை மேகம் மூடச் செய்துள்ளது.
உப்பங்கழி தொழிலுக்கான இடத்தை இதுவரை பலரும் (சிறிய இடம் முதல் பெரிய இடம் வரை) குத்தகை எடுத்து நடத்தி வந்தனர். ஆனால், அந்த குத்தகையை முடித்துக்கொள்ள முடிவுசெய்த மத்திய அரசு, அவ்விடத்தை வேறு தொழில்களுக்கு விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
வசதியுள்ள குத்தகைதாரர்கள் நீதிமன்றம் சென்று தடையாணை வாங்கியுள்ளார்கள். ஆனால், வசதியற்றவர்கள் வேறு தொழிலுக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் என்ன கொடுமையென்றால், பலருக்கு வேறு தொழிலே தெரியாது என்பதுதான். எனவே, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.