புதுடெல்லி: அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியலை இறுதிசெய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த ஜுலை 31 காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென கோரியுள்ளது மத்திய அரசு.
இந்தியா என்பது அகதிகளின் தலைநகரமாக மாறிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் இதை தெரிவித்தார்.
வங்கதேச எல்லையோரம் அமைந்த மாவட்டங்களில், மறுசரிபார்ப்பு பணிகளை பெரியளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த நாடுதான் இந்தியாவிற்கு சட்டவிரோத குடியேறிகளை அள்ளித்தரும் முக்கிய வள ஆதாரமாக திகழ்வதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத குடியேறிகளை குடிமக்கள் பட்டியலில் சேர்த்த உள்ளூர் அலுவலர்களின் செயல் சதிக் குற்றமாக கருதப்படும் என்று மத்திய அரசின் சட்ட அதிகாரி தெரிவித்தார்.
“குடிமக்கள் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல சேர்க்கைகள் மற்றும் நீக்கங்கள் தவறானவை. பல லட்சம் நபர்கள் குறித்த விபரங்களைக் கண்டறிய வேண்டியுள்ளதால், அதிக காலம் தேவைப்படுகிறது” என்றார் துஷார் மேத்தா.