சென்னை:

வேலூர் பாராளுமன்ற தொகுதி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும்,  திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது.  அப்போது,  பணப்பட்டுவாடா காரணமாக தமிழகத்தில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு  ஜூலை11ந்தேதி தொடங்கி  ஜூலை 18ந்தேதி (நாளை)யுடன்  முடிவடை கிறது. அதையடுத்து வாக்குப்பதிவு ஆகஸ்டு 5ந்தேதி என்றும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்டு 9ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, ஏற்கனவே அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று திமுக கூட்டணி வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தனது தந்தை மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கதிர்ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளராக  அவரது மனைவி களமிறக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களும் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

ஏற்கனவே பண பட்டுவாடா காரணமாக வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதால் இந்த முறை பண பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை தீவிரமாக சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். தேர்தல் செலவின பார்வையாளராக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான முரளிகுமாரை சிறப்பு செலவின பார்வையாளராக நியமித்து தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 83000 30526, 83000 30527 என்ற செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.