டில்லி:
மத்திய அரசு சமீபத்தில் நடத்திய தபால்துறை தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களைவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால், சபை அமளிதுமளியானது. இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14ந்தேதி) தபால்துறை பணிக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில், தபால்துறை தேர்வு குறித்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் முரளிதரன், தபால் துறை தேர்வு விவகாரம் மிக முக்கிய மானது, இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம், ஆய்வுக்கு பின் முறையான பதிலை நாளை காலை தெரிவிப்போம் என்று கூறினார்.
அவரது பதிலில் திருப்தி அடையாத அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.