சென்னை: காசோலை எழுதும்போது இரண்டுவிதமான இங்க் பயன்படுத்தினால், காசோலை மற்றும் உறுதியளிப்பு ஆகிய இரண்டும் செல்லாததாக மாறிவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கொன்றில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
மல்லிகா என்பவர் கொடுத்த காசோலையில் குறிப்பிடப்பட்டிருந்த ரூ.35000 என்ற தொகை, இரண்டு இங்க் கொண்டு எழுதப்பட்டிருந்தது. முதல் எழுத்தான 3 என்பது நீல இங்க் கொண்டும், அடுத்த 4 எழுத்துக்களான 5000 பச்சை இங்க் கொண்டும் எழுதப்பட்டிருந்தது. எனவே, இதை மற்றொரு தரப்பு ஏற்கவில்லை. இதில் மோசடி நடந்துள்ளது என்று அந்த காசோலை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இதை எதிர்த்து 2 கீழ் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் மல்லிகா தரப்பிற்கு எதிராக வந்தன. எனவே, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நடைபெற்ற விசாரணையில், நீதிபதி சி.வி.கார்த்திகேயன், என்ஐஏ சட்டம் பிரிவு 87ன் படி, இந்த காசோலை செல்லாது என்று தீர்ப்பளித்தார்.