சண்டிகர்
தாம் ஏற்கனவே தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் அளித்து விட்டதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து முதலில் பாஜகவில் இருந்தார். அக்கட்சியில் மாநிலங்களை உறுப்பினராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து கருத்து வேற்றுமை காரணமாக 2016 ஆம் வருடம் பாஜகவை விட்டு விலகினார். அதன் பிறகு அவர் காங்கிரசில் இணைந்து பஞ்சாப் மாநில அரசில் அமைச்சராக பணி புரிந்து வருகிறார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். அப்போது நவ்ஜோத் சிங் சித்து அமேதியில் ராகுல் காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் அவ்வாறு நடக்கவில்லை எனில் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார்.
இந்த தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார். அதானல் பஞ்சாப் மாநிலம் மெகாலி உள்ளிட்ட பல பகுதிகளில் சித்து எப்போது பதவி விலகுவார் என கேள்விகள் கேட்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த ஜூன் பத்தாம் தேதி அளித்த ராஜினாமா கடிதம்” என ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தாம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதியிட்ட தமது ராஜினாமா கடிதத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.