மைசூர்

மைசூர் – வாரணாசி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குப்பை கிடந்தது குறித்து புகார் அளித்தவருக்கு நெட்டிசன்கள் அறிவுரை அளித்துள்ளனர்.

கடந்த ஆறாம் தேதி அன்று மைசூர் – வாரணாசி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரஷாந்த் எஸ் ஜெய்ஷ்வால் என்னும் பயணி பயணம் செய்துக் கொண்டிருந்துள்ளார். அவர் பயணம் செய்த மூன்றடுக்கு ஏசி பெட்டி இரு நாட்களாக சுத்தம் செய்யப்படவில்லை. அதனால் அந்த ரெயில் பெட்டி முழுவதும் குப்பை கூளங்களுடன் இருந்துள்ளது. அதை படம் பிடித்து பிரஷாந்த் தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “நான் 16229 எண் கொண்ட மைசூர் வாரணாசி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்கிறேன். இரு நாட்களாக சுத்தம் செய்வோர் இங்கு வரவில்லை. இந்திய ரெயில்வே நாம் அளிக்கும் பணத்தை வைத்து என்ன செய்கிறது என தெரியவில்லை . இந்திய ரெயில்வே. பயணிகள் மீது அக்கறை இல்லை” என பதிந்துள்ளார். அவருக்கு ஆதரவுக்கு பதில் அறிவுரைகள் குவிந்துள்ளன.

இந்த பதிவுக்கு ஆரோகி திரிபாதி என்பவர், “நீங்கள் பணம் அளிக்கிறீர்கள் என்பதால் நீங்கள் விரும்பும் இடத்தில் எல்லாம் குப்பையை எறிய முடியும் என பொருள் இல்லை. சுத்தம் செய்பவர் வரும் வரை நீங்கள் குப்பையில் தான் அமர்ந்திருக்க வேண்டும்” என பதில் அளித்துள்ளார்.

மானினி என்பவர், “இவ்வளவு குப்பையை எறிந்தது யார்? எப்போதும் மற்றவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்” என பதில் அளித்துள்ளார்.

சமீர் என்பவர், “இவ்வளவு குப்பையை போட்ட உங்களை போன்றோர் இதற்கு அவமானப்பட வேண்டும். நீங்கள் ரெயில்வே /மீது எவ்வாறு குறை கூறலாம்? உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். ரெயிலில் குப்பை போடுபவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிந்துள்ளார்.