புதுடெல்லி: இந்தியாவில் மிகவும்வெற்றிகரமாக செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓஎன்ஜிசி, மோடியின் ஆட்சி வந்தபிறகு மிகவும் மோசமாக சிதைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது; ஆயில் அண்ட் நேரச்சுல் கேஸ் கார்பரேஷன் என்று அழைக்கப்படும் ஓஎன்ஜிசி, கடந்த 1950கள் மற்றும் 1960களில் இந்திய அரசால் மேம்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இந்திய உள்நாட்டு எரிபொருள் தேவைகளை சிறப்பாக ஈடுசெய்து, தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வந்தது.

பின்னர், 1991ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால், தாராளமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர், இந்த நிறுவனத்தை அரசு திட்டமிட்டு சிதைக்கத் தொடங்கியது. கடந்த 1992 – 1993ம் ஆண்டுகளில் இந்த நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 28 முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள், அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன.

மேலும், கடந்த 1991ம் ஆண்டு, தேவையேயின்றி, உலக வங்கியிடமிருந்து 450 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கடனாகப் பெற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது. அதாவது, அரசு – தனியார் கூட்டு அமைப்பாக இந்த நிறுவனம் வளர வேண்டுமென்பதே அந்த கடன் கொடுக்கப்பட்டதன் நோக்கம்.

இவ்வகையில், இந்தியாவின் லாபகரமான ஒரு அரசு நிறுவனமாக இருந்த ஓஎன்ஜிசி, படிப்படியாக சிதைக்கப்பட்டு வந்த நிலையில், மோடி அரசு வந்தவுடன் மிகவும் மோசமான ஒரு அவல நிலைக்கு வந்துவிட்டது. சிறப்பான லாபத்தை ஈட்டிவந்த அந்த நிறுவனம், அரசின் தனியார்மய கொள்கைகளால் தற்போது மலையளவு கடனில் சிக்கித் தவிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.