சென்னை
திருப்பதியில் கைது செய்யப்பட்ட சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் கரூரை சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த 4 மாதங்களாக காணாமல் போய் இருந்தார். அவரை தேடிக் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஆயினும் அவர் இருப்பிடம் தெரியாமல் இருந்தது. அவரைப் பற்றி பல செய்திகள் உலவி வந்தன.
நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விரைவில் அவரை கண்டுபிடிப்பதாக உறுதி அளித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முகிலன் மீது கரூரை சேரந்த ஒரு பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் முகிலன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும் அந்த பெண் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நேற்று திருப்பதி ரெயில்வே காவல்துறையால் கைது செய்யப்பட்ட முகிலன் சென்னை வரவழைக்கப்பட்டு அவர் சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படக்கப்படார்.. அவரது ஆட்கொணர்வு மனு மற்றும் பாலியல் பலாத்கார புகார் ஆகியவை குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் அவரை விசாரித்தனர்.
முகிலன் மீது அளிக்கப்பட்டுள்ள பலாத்கார வழக்கில் அவரை கைது செய்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர் நாளை ஆட்கொணர்வு மனு தொடர்பாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். நாளை இட மாறுதல் வாரண்டு பெற்று அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட் உள்ளார்.