ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் போக்குவரத்து நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.ஆனால் கடந்த 4 மாதங்களாக முற்றிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் குடிநீருக்காக பல கி.மீ. தூரம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி இன்று காலை போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன் கோவில் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.