அத்திரவரதர் பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்க கோரி, கோவில் பரம்பரை அறங்காவலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதர் சிலை எடுக்கப்பட்டு, அவற்றுக்கு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இச்சிலையை பிரம்மன் செய்து வழிபட்டதாகவும், அப்போது சிலையின் மீது தீ பற்றியதால், விஷ்னுவின் அறிவுருத்தல் படி குளத்தை அச்சிலையை பிரம்மன் வைத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன. இச்சிலை தற்போது ஜூலை 1ம் தேதி வெளியே எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பூஜிக்கப்படுகிறது. அத்திவரதரை காண முதல் நாளிலிருந்தே லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துக்கொண்டு இருக்கின்றனர்.
இத்தகைய நிலையில், அத்திவரதர் பூஜையில் தாங்களும் பங்கேற்க அனுமதி வழங்க அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், ஆனால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தாங்கள் பங்கேற்க அறநிலையத்துறை அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி, திருக்கோவில் பரம்பரை அறங்காவலர்களாக உள்ள தாத்தாச்சியார் குடும்பத்தினர் சார்பில், டி.கே சம்பத்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.