சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதி மக்களவை தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக பொருளாளர் துரைமுருகன் மகனின் பெயரை மீண்டும் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்து உள்ளது.
அதுபோல அதிமுக கூட்டணி சார்பில் கடந்தமுறை போட்டியிட்ட ஏசி சண்முகமே மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பணப்பட்டுவாடா காரணமாக தமிழகத்தில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு ஜூலை11ந்தேதி தொடங்கி ஜூலை 18ந்தேதி முடிவடைகிறது. அதையடுத்து வாக்குப்பதிவு ஆகஸ்டு 5ந்தேதி என்றும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்டு 9ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், தேர்தலில் மீண்டும் திமுக சார்பில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்துஉள்ளது.
அதுபோல அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.