மைசூரு: கர்நாடகத்தில் அரசை நடத்தும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணியில் பிரச்சினைகள் இருந்தாலும், அவை சமூகமாக தீர்க்கப்படும் என்றும், அரசின் ஆயுளுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகெளடா.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததையடுத்து, கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்துதான் இவ்வாறு கூறியுள்ளார் தேவகெளடா.
“கர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு இந்த அரசு கவிழ வேண்டுமென்ற ஆசை இருந்தால், அவர் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். ஆனால், இந்த அரசு ஸ்திரத்தன்மையுடன் செயல்படும்” என்றார்.
மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எச்.விஸ்வநாத், சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனையடுத்து எச்.கே.குமாரசாமியை கட்சியின் மாநிலத் தலைவராகவும், பேரன் நிகில் குமாரசாமியை கட்சியின் இளைஞரணி தலைவராகவும் நியமித்துள்ளார் தேவகெளடா.