லாகூர்: ஐஎம்எஃப் மற்றும் இதர நாடுகளிடம் நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, பாகிஸ்தான் தொடர்ந்து கடன்பெற்று வரும் நிலையில், சர்வதேச நெருக்கடிகளைத் தவிர்க்கும் பொருட்டு, தன் நாட்டு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கை நிதிசேர்ப்பு தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
நடவடிக்கைக்கு உள்ளானவர்களில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையது மற்றும் அவரின் பல உதவியாளர்கள் ஆகியோரும் அடக்கம்.
சம்பந்தப்பட்ட நபர்களின் மீதான வழக்குகள் லாகூர், குஜ்ரன்வாலா மற்றும் முல்தான் ஆகிய இடங்களில் பதியப்பட்டன. தீவிரவாத நடவடிக்கைகளுக்காக பலவகைகளிலும் நிதி பெறப்பட்டு, அறக்கட்டளைகள் மற்றும் லாபநோக்கமற்ற அமைப்புகள் என்பதாக மாற்றிவைக்கப்பட்டதால் இந்த வழக்குகள் பதியப்பட்டன என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜுலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஃபலா-இ-இன்சனியாட் ஃபவுண்டேஷன் ஆகிய இயக்கங்களின் தலைமைகளுக்கு எதிராக, 23 வழக்குகளை, பயங்கரவாத நோக்கங்களுக்காக நிதி சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பதிவுசெய்தது அந்நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு துறை.