டில்லி

சென்ற வாரம் நடந்த நீர் பிரச்னை குறித்த மாநிலங்களவை கூட்டத்துக்கு பல உறுப்பினர்கள் வருகை தராமல் இருந்தது பற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாடெங்கும் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. உலகின் ஆறாம் பெரிய நகரமான சென்னையில் அதிக அளவில் தண்ணீர் பஞ்சம் உள்ளதாகவும் இந்தியாவின் முதல் வரண்ட நகரமாக சென்னை மாற வாய்ப்புள்ளதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் பெய்ய வேண்டிய மழையில்  சென்ற வருடம் 41% குறைவாக பெய்துள்ளது.

இது குறித்து விவாதிக்க சென்ற வாரம் மாநிலங்களவை கூட்டம் ஒன்று நடந்தது. இதில் பல உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவில்லை. நாட்டின் மிக மிக முக்கிய விவகாரம் குறித்து நடக்கும் விவாதத்தில் வெகு சிலர் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரங்கராஜன், “சென்னை மக்கள் தற்போது டான்கர் தண்ணீர், நகராட்சி விநியோகம் மற்றும் தனியாரை மட்டுமே நீருக்கு நம்பி உள்ளனர். ஒரு லாரி தண்ணீர் விலை ஒரு கிராம் தங்கத்தை விட அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த நீர் பற்றாக்குறை குறித்து சிவசேனா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் பதிலளிக்கையில் வரும் 2024 ஆம் வருடத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். மேலும் அரசு நீர் மேலாண்மை குறித்து எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த கூட்டம் குறித்த புகைப்படம் தற்போது வெளியான போது மிகச் சிலரே அவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நாட்டுக்கு தேவையான பிரச்னை குறித்த விவாதம் நடக்கும் போது அந்த பிரச்னையை தீர்த்து வைக்கும் பொறுப்புள்ள உறுப்பினர்கள் விவாதத்துக்கு வராமல் இருந்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது..