அலகாபாத்
நீதிபதிகள் நியமனத்தில் சாதியம் மற்றும் பாரபட்சம் உள்ளதாக பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதி உள்ளார்.
உச்சநீதிமன்ற கொலிஜியம் அனைத்து உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்த பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கிறது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகின்றது. பொதுவாக இந்த நீதிபதிகள் நியமனம் குறித்து நீதிபதிகள் எவ்வித கருத்தும் தெரிவிப்பது இல்லை. ஆனால் முதல் முறையாக ஒரு நீதிபதி இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே பிரதமருக்கு இந்தியில் இந்த மாதம் 1 ஆம் தேதி அன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 34 வருடங்களில் நீதிபதிகளாக நியமிக்கப் பட்டவர்களில் பலர் குறைந்த சட்ட அறிவுடனும் அல்லது சட்ட அறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர். இந்த நியமனங்கள் அனைத்தும் மூடிய அறைக்குள் குறிப்பிடப்பட்ட சிலரால் முடிவு செய்யப்படுகிறது.
நீதிபதிகள் நியமனங்களில் பாரபட்சம் மற்றும் சாதியம் மட்டுமே அதிகமாக உள்ளது. இந்த ரகசிய முறை நியமனத்தில் இறுதி நேரத்தில் நியமனம் குறித்த முடிவுகள் வெளிவருகின்றன. நீதிபதிகள் எந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பதை யாரும் தெரிந்துக் கொள்ள இயலாத நிலை உள்ளது. இது மிகவும் துரதிருஷ்ட வசமானது.” என ரங்கநாத் பாண்டே எழுதியுள்ளார்.
நீதிபதி ரங்கநாத் பாண்டே நாளை பணி ஓய்வு பெற உள்ளார்.