டில்லி

ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் இடம்  பெற உள்ள பாஜக தேர்தல் வாக்குறுதிகள்

புதியதாக நிதி அமைச்சர் பதவி ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இது கடந்த ஐந்தாண்டு பாஜக ஆட்சியின் தொடர்ச்சியாக இருந்தாலும் இம்முறை பல துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது என்பதால் பல சலுகைகளை அளிக்க வேண்டி உள்ளது..

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பல தேர்தல் வாக்குறுதிகள் அளித்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இந்த வாக்குறுதிகளில் 6 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெறக்கூடும் என சொல்லப்படுகிறது.

1. விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் : கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் புதிய கடன்கள் வழங்கப்படும் எனவும் இதை ஒழுங்காக திருப்பி செலுத்துவோருக்கு மேலும் ஐந்து வருடங்கள் கடன் அளிக்கப்படும் என்பதும் ஒரு தேர்தல் வாக்குறுதி ஆகும். தற்போது நாடெங்கும் சுமார் 7 கோடி கிசான் கார்டுகள் உள்ளன.

2. தொழில் முனைவோருக்கு சொத்து ஈடில்லாமல் ரூ. 50 லட்சம் வரை கடன் : இந்த திட்டத்தின் கீழ் அரசு மொத்த கடன் தொகையில் பெண்களுக்கு 50% மற்றும் ஆண்களுக்கு 25% உறுதி அளிப்பதன் அடிப்படையில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இந்த கடன் உதவி அளிக்கபடுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது..

3, 10,000 விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் அமைத்தல் : ”வரும் 2022க்குள் நாட்டில் 10000 புதிய விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் விவசாய பொருட்களை பெரிய நகரங்களில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய அரசு உதவி செய்வதால்  விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்” என்பது மற்றொரு வாக்குறுதி ஆகும்.

4. பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரை விற்பனை : ”தற்போது வெளிச் சந்தையில் சர்க்கரை கிலோ ரூ.35 க்கு விற்கப்படுகிறது. அரசு இனி சர்க்கரையை பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிலோ ரூ. 13 என விற்பனை செய்ய உள்ளது. இதனால் குடும்பத்தினர், சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகள் ஆகிய அனைவரும் பயன் அடைவார்கள்” என்பது நான்காம் வாக்குறுதி ஆகும்.

5. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அங்கன் வாடி பணியாளர்கள் : தற்போது அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத் காப்பிட்டு திட்டம் விரிவாக்கப்பட்டு அதில் அரசின் கீழ் பணி புரியும் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் இணைக்கபடுவார்கள்.

6. ஜிஎஸ்டி யின் கீழ் வரும் வணிகர்களுக்கு சலுகைகள் : ஜிஎஸ்டியின் கீழ் வரும் வணிகர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை இலவச காப்பீடு. வணிகர் கடன் அட்டை போன்ற சலுகைகள் வழங்கப்படும் என்பது ஆறாம் வாக்குறுதி ஆகும்.